திருச்சி:பல்வேறு நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இவர்களை கண்டுபிடிக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சென்னை, திருச்சி உள்பட பலவேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. சென்னையில், கடந்த 7ம் தேதி காரில் தங்கம் கடத்தி வருவதாக டி.ஆர்.ஐ.க்கு ரகசிய தகவல் வந்தது. தீவிர சோதனையில் அந்த காரை மறித்து 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த முகமது சித்திக் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியிலிருந்து தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, மத்திய வருவாய் பிரிவினர், திருச்சியில் சமயபுரம் டோல் பிளாசாவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை மறித்து சோதனையிட்டதில் 6 கிலோ தங்கம் கடத்தி வந்ததும், கடத்தி வந்தவர் சென்னையை சேர்ந்த ஹாஜி முகமது(26) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், திருச்சி விமான நிலையம் அருகே உள்ள குண்டூரில் ஒரு வீட்டில் தங்கியிருந்த செங்கல்பட்டை சேர்ந்த அங்கமுத்து(46) என்பவர் தங்கத்தை தந்ததும், அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் துப்புரவு காண்ட்ராக்ட் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் லாரன்ஸ், கழிவறைகளில் கடத்தல் குருவிகள் விட்டு செல்லும் தங்கத்தை கடத்தி வந்து கொடுத்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் பிரிவினர், அங்கமுத்துவின் வீட்டில் சோதனையிட்டதுடன் அங்கமுத்துவையும், விமான நிலைய வாயிலில் லாரன்சையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கார், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து லாரன்ஸ், அங்கமுத்து, ஹாஜி முகமது ஆகிய 3 பேரையும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
அதிகாரிகளுக்கு தொடர்பு: தங்க கடத்தலில் விமான நிலைய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. முகமது சித்திக்குக்காக தங்கத்தை கடத்தி வந்து விமான நிலைய கழிவறைகளில் விட்டு செல்லும் குருவிகள் யார், லாரன்சை தவிர வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, தங்கம் கடத்தலில் எவ்வளவு நாளாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எவ்வளவு தங்கம் கடத்தியுள்ளனர் என விசாரணை நடக்கிறது.