பெரம்பூர்: புளியந்தோப்பு சூளையை சேர்ந்தவர் அரிகரன் (48). இவர் புளியந்தோப்பு, பட்டாளம், சூளை ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை செய்கிற ஊழியர்களுக்கு பணம் கொடுத்து ரேஷன் கோதுமையை வாங்கி அதை மெஷினில் அறைத்து பாக்கெட் செய்து புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இந்த கோதுமையில் சப்பாத்தி, பரோட்டா, அல்வா போன்ற பொருட்கள் தயார் செய்து ஓட்டலில் விற்பனை செய்து வந்தனர். நேற்று மதியம் புளியந்தோப்பு, ஓட்டேரி, சூளை ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 20 மூட்டைகள் கொண்ட 500 கிலோ எடையுள்ள கோதுமையை மினிவேனில் எடுத்துக்கொண்டு பேசின் பிரிட்ஜ் டிமளஸ் சாலை வழியாக அரிகரன் வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பேசின் பிரிட்ஜ் போலீசார் மினிவேனை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.
வண்டியில் கோதுமை மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் கோதுமைகளை கள்ளத்தனமாக வாங்கி ஓட்டல்களுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது. இதையடுத்து பேசின்பிரிட்ஜ் போலீசார் அம்பத்தூரில் உள்ள உணவு பொருட்கள் தடுப்பு பாதுகாப்பு போலீசாரிடம், கோதுமை மூட்டைகளுடன் மினிவேனையும், அரிகரனையும் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.