வேலூர்:மணல் வியாபாரியிடம் ரூ.1.45 லட்சம் லஞ்சம் வாங்கி பிடிபட்ட ஆம்பூர் டிஎஸ்பி தனராஜன், மணல் மற்றும் கள்ளச்சாராயம், காட்டன் சூதாட்ட ஆசாமிகளிடம் மாதந்தோறும் ரூ.1.50 கோடி வரை வசூல் மழையில் நனைந்த விவகாரம் காவல்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்று மணல் குவாரிகள், நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டதால் தொழிலை கைவிட்ட மணல் லாரி, மாட்டு வண்டி உரிமையாளர்களை ஆம்பூர் டிஎஸ்பி தனராஜ் கைது செய்வதாக மிரட்டி மீண்டும் மணல் ஓட்ட லாரி வேண்டும் என்றும், அதற்காக மாமூலையும் தொடர்ந்து தர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார். இதில் சாணாங்குப்பத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் உட்பட பலரிடம் லாரி ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் என கணக்கிட்டு ரூ.1.45 லட்சம் லஞ்சத்தை நேற்று முன்தினம் எஸ்.ஐ. லூர்து ஜெயராஜ் மூலம் பெற்றபோது டிஎஸ்பி தனராஜ் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கினார்.
டிஎஸ்பி தனராஜின் சொந்த ஊர், தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஆபட்டி என்ற கிராமம் ஆகும். தற்போது சென்னை ஆழ்வார்பேட்டை சிஐடி காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்புதான் விருதுநகரில் இருந்து ஆம்பூருக்கு மாறுதலாகி வந்துள்ளார். ஆம்பூருக்கு வந்தவுடன் மணல் மாபியாக்களின் வருவாய் குறித்து அறிந்து, அவர்களை பட்டியலிட்டு ஒவ்வொருவரையும் நேரில் போய் சந்தித்தார். இதில் மாட்டு வண்டி உரிமையாளர்களும் அடக்கம். அதேபோல் கள்ளச்சாராய ஆசாமிகள் தொடர்பான பட்டியலையும், காட்டன் சூதாட்ட ஆசாமிகளின் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு தனித்தனியாக அவர்களிடம் மாதாமாதம் இவ்வளவு தர வேண்டும் என்று நிர்ணயம் செய்து மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு மாதந்தோறும் இவருக்கு சராசரியாக ரூ.1.50 கோடி வரை மாமூல் வசூலாகும் என்று கூறப்படுகிறது.
இதற்காக, நேற்று முன்தினம் இவருடன் பிடிபட்ட லூர்து ஜெயராஜ் உட்பட ஒரு இன்ஸ்பெக்டர், பல எஸ்.ஐ.க்கள், எஸ்.எஸ்.ஐ.க்கள், ஏட்டுகள் ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டனர். தற்போது இவர்கள் குறித்து மாவட்ட காவல்துறை தலைமை விசாரணையில் இறங்கியுள்ளது. இதனால், இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது.
சென்னை வீட்டில் அதிரடி சோதனை
லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட ஆம்பூர் டிஎஸ்பி தனராஜனின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டை சிஐடி காலனி முதல் மெயின் ரோட்டில் உள்ளது. அந்த வீட்டில் நேற்று காலை முதல் இரவு வரை சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி குமரகுரு தலைமையில் நடந்த இந்த சோதனையில் கடந்த ஓராண்டில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள், பணம், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் வீட்டு மனைகள் மற்றும் நிலங்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து வீட்டில் உள்ள உறவினர்களிடம் போலீசார் நேற்று நள்ளிரவு வரை விசாரித்தனர். ஆம்பூரில் டிஎஸ்பி தங்கியிருந்த லாட்ஜ் அறையில் இதுவரை சோதனை நடத்தப்படவில்லை.