கோபாலசமுத்திரம் நீரேற்று நிலையத்தில் திறந்தே கிடக்கும் ஆழ்துளை கிணறு

2018-02-10@ 13:09:20

அறந்தாங்கி : அறந்தாங்கி கோபாலசமுத்திரம் நீரேற்று நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதால் கடந்த பல மாதங்களாக இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு கடும் வறட்சி நிலவியது. அப்போது அறந்தாங்கி நகரில் கோபாலசமுத்திரம், எல்.என்.புரம், நாடிமுத்து ஆகிய 3 நீரேற்று நிலையங்களில் ரூ.8 லட்சம் வீதம் ரூ.24 லட்சம் மதிப்பில் 3 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் கோபாலசமுத்திரம் நீரேற்று நிலையம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டபோது, அப்போது தமிழகம் வந்த மத்திய அரசின் சிறப்பு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 பின்னர் அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கோபாலசமுத்திரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, அதன்மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோபாலசமுத்திரம் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்தது. இதனால் நகராட்சி நிர்வாகம் அந்த மோட்டாரை பழுதுநீக்கம் செய்து பொருத்துவதற்காக அகற்றியது.

 மோட்டார் அகற்றப்பட்டநிலையில், அதைசீர் செய்து மாற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபாலசமுத்திரம் நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் பெறும் பகுதிகளுக்கு முறையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோபாலசமுத்திரம் ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டார் அகற்றப்பட்ட நிலையில் ஆழ்துளை கிணறு விதிகளின்படி மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறுவர் சிறுமியர் ஆழ்துளை கிணற்றின் உள்ளே தவறி விழும் அபாயம் உள்ளது.

அறந்தாங்கி நகரம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நகராக இதுவரை இருந்து வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகளாலும், ஆழ்துளை கிணறுகளை முறையாக பராமரிக்காததாலும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கோபாலசமுத்திரம் நீரேற்று நிலைய ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!