பிரதமர் அலுவலகம் பரிந்துரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாக முடிவெடுக்க வேண்டும்

2018-02-10@ 00:14:01

புதுடெல்லி: ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்’ என மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2015ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தமிழகம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், அசாம், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் டெல்லியில் உள்ளது போல் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த மருத்துவமனையை அமைப்பதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை,  தஞ்சாவூர், செங்கல்பட்டு, ஈரோடு,  பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் என ஆகிய 5 இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக இருப்பதாகவும், இவற்றில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யலாம் என மத்திய அரசுக்கு  தமிழக அரசு தகவல் அனுப்பியது. ஆனால், இதுநாள் வரை இது தொடர்பாக எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது.

இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் கேகே.ரமேஷ் என்பவர் பொதுநலன் வழக்கை தொடர்ந்தார். அதில், ‘தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்பதை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் நேற்று பரிந்துரை கடிதம் அனுப்பியது, அதில், ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் இடத்தை மத்திய சுகதார அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!