சட்ட விரோத பணப் பரிமாற்றம் பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை

2018-02-10@ 00:13:46

பெங்களூரு: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரியில் ஏகே ரக துப்பாக்கி, 200 குண்டுகள், 5 கையெறி குண்டு, சாட்டிலைட் போன் ஆகியவற்றுடன் பிலால் அகமது கட்டா என்கிற இம்ரான் ஜலாலை கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர் மீது இந்திய அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதால் அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவ்சங்கர் அமரன்னவார், தீவிரவாதி பிலாலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

4வது நபர் பிலால்
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டம் 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, 2005ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுபோன்ற வழக்கில் ஏற்கனவே ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர்  ஹரி நாராயணன் ராய்,  அலாவுதீன், முகமது கோயா உள்ளிட்டோருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது 4வது நபராக பிலாலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!