ஆந்திராவுக்கு நிதி கொடுக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த சந்திரபாபு உத்தரவு

2018-02-10@ 01:26:33

புதுடெல்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகிறது. ஆந்திராவுக்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கும் வரையில், நாடாளுமன்றத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தும்படி தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகும் எனவும் தெரிகிறது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இதன் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்ரவாக உள்ளார். கடந்த 1ம் ேததி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தனது மாநிலத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், தனது மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசின் மீது சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார். மேலும், ஆந்திராவுக்கு நிதி ஒதுக்கக் கோரியும், சிறப்பு சலுகைகளை அறிவிக்கக்கோரியும் நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி எம்பி.க்கள் நேற்று முன்தினம், அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்குவது பற்றி 2 நாட்களில் முடிவு செய்யப்படும்’ என அறிவித்தார். மேலும், மாநில பிரிவினைக்குப் பிறகு ஆந்திராவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளை பட்டியலிட்டார். இருப்பினும், தெலுங்கு தேசம் எம்பி.க்கள் இதை ஏற்கவில்லை.

சந்திரபாபு நாயுடு இப்போது துபாயில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து நேற்று முன்தினம் அவர் தொலைபேசி மூலமாக தனது கட்சி எம்பி.க்கள் மற்றும் மத்திய அரசில் இடம் பெற்றுள்ள 2 அமைச்சர்களுடனும் பேசினார். அப்போது, மக்களவையில் அருண் ஜெட்லி அளித்த உத்தரவாதம் பற்றியும், அவர் பேசிய விவரங்களையும் சந்திரபாபுவிடம் அவர்கள் தெரிவித்தனர். அப்போது சந்திரபாபு மிகவும் கோபப்பட்டு, ‘இந்தியாவின் ஒரு அங்கமாக தாங்கள் இல்லை என்று ஆந்திர மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது’ என்று எம்பி.க்களிடம் கூறியுள்ளார்.

இது பற்றி தெலங்கு தேசத்தின் மக்களவை கட்சித் தலைவர் தோட்டா நரசிம்மன் அளித்த பேட்டியில், ‘‘ஆந்திராவின் கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், மத்திய அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்தும்படி சந்திரபாபு நாயுடு எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எங்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை எனவும், கடந்த 3 நாட்களாக எங்களுக்கு அது அளிக்கும் பதில்கள் சரியாக இல்லை என்றும் அவர் வருத்தப்பட்டார் ’’ என்றார்.

ஆந்திராவுக்கு ராகுல் ஆதரவு:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும், போலவரம் நீர்பாசன திட்டம் உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும் நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது. இப்பிரச்னை பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சிறப்பு அந்தஸ்து மற்றும் போலவரம்  நீர்பாசன திட்டத்தை விரைந்து முடிக்க கோரும் ஆந்திர மக்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் நீதியை நிலைநாட்ட ஆதரவு தெரிவிப்பதுடன், அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய தருணம் இது’ என கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!