நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க ஜனாதிபதியிடம் எம்பிக்கள் கோரிக்கை

2018-02-10@ 01:24:59

புதுடெல்லி: குஜராத்தில் 2006ம் ஆண்டு சொராபுதீன் என்கவுன்டர் வழக்கில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா, 2014ம் ஆண்டு நாக்பூரில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது திடீரென மாரடைப்பு என கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மரணத்தி–்ல் மர்மம் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேற்று நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். மேலும், 15 கட்சிகளைச் சேர்ந்த 114 எம்பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் வழங்கினர். அதில் சிறப்பு விசாரணை குழு அமைக்்க வலியுறுத்தப்பட்டு இருந்தது.

ஜனாதிபதியை சந்தித்த பின் பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘‘நீதிபதி லோயா உட்பட மேலும் 2 நீதிபதிகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெரும்பாலான எம்பிக்கள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கூடாது. ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளார். இந்த விஷயத்தை கவனிப்பதாக உறுதி கூறி உள்ளார்’’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!