சென்னை: தமிழகம் முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 2,700 டாஸ்மாக் கடைகள் பாருடன் செயல்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளை ஆளுங்கட்சியினர் நடத்தி வருகின்றனர். கடந்த வருடம் டாஸ்மாக் கடைக்கு வரும் வருமானத்தில் 3 சதவிகித கமிஷனை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று பார் உரிமையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியது. இதனால், பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்காமல் புறக்கணித்து வந்தனர். மேலும், கடந்த ஆண்டு 4 முறை நடந்த பார் ஏலத்தையும் புறக்கணித்தனர். இந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் 28ம் தேதி கடைசியாக டாஸ்மாக் பார்கள் ஏலம் விடப்பட்டது. ஆனால், இந்த ஏலத்தையும் பார் உரிமையாளர்கள் புறக்கணித்தனர். இதனால், அரசு வழங்கிய காலக்கெடு முடிந்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவுடன் தமிழகத்தில் சுமார் 2,600 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளை நேரடியாக சந்தித்து கமிஷன் தொகை குறைப்பது பற்றி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
தொடர்ந்து அரசுக்கும், டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கும் நீடித்து வரும் கமிஷன் தொகை குறைக்கும் பிரச்சனையால் 1 மாதத்திற்கும் மேலாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கமிஷன் தொகை பிரச்சனைக்கு அரசு முன்கூட்டியே தீர்வு கண்டிருந்தால் ரூ.500 கோடி வருவாய் இழப்பு ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். இதற்கு டாஸ்மாக் அதிகாரிகளும், அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும் என டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசன் கூறியதாவது: இவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தற்போது பேரூராட்சி, ஊராட்சிக்கு மட்டும் மாதாந்திர விற்பனை தொகையில் கமிஷன் செலுத்த வேண்டியது 80 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் உள்ள பார்களுக்கு இந்த குறுமத்தொகை குறைக்கப்படவில்லை.
தற்போதும் 80 சதவிகிதத்தில் இருந்து குறுமத்தொகை செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் என்பது குறைவாக தான் இருக்கும். மொத்தம் 400 பார்கள் வரையில் தான் இருக்கும். ஆனால், இந்த இடங்களில் சதவிகிதத்தை குறைத்துள்ளது. ஆனால், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பார்களின் சதவிகிதத்தை அரசு குறைக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு இனிமேலும் தொடர கூடாது. மேலும், மறைமுகமாக செயல்படும் பார்களின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மறைமுக பார்கள் மூலம் லட்ச கணக்கில் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற மறைமுக பார்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வரும் 26ம் தேதி மறுபடியும் டாஸ்மாக் பார்கள் ஏலத்தை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பார் உரிமையாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறோம். எனவே, நாளை முதல் மூடிக்கிடக்கும் பார்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மேலும் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு கூறினார். மறைமுகமாக செயல்படும் பார்களின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மறைமுக பார்கள் மூலம் லட்ச கணக்கில் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.