தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 4 பேர் கைது 2.08 கோடி செம்மரம் பறிமுதல் ஆந்திராவில் போலீஸ் அதிரடி

2018-02-10@ 00:13:44

திருமலை: சித்தூர் அருகே 2.08 கோடி மதிப்புள்ள கடத்தல் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 4 பேரை கைது செய்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, ரங்கம்பேட்டை வனப்பகுதியில் இருந்து காரில் செம்மரக்கட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் காருடன் தப்பியோடிய கடத்தல்காரர்களை போலீசார் விரட்டிச் சென்றனர். அப்போது அந்த கும்பல், நாராயணா கல்லூரி அருகே காரை நிறுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் தப்பினர். காரை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்த 8 லட்சம் மதிப்புள்ள 8 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

 இதேபோல், புத்தூர் பகுதியில் கடந்த 6ம் தேதி போலீசார்  வாகன சோதனை நடத்தினர். அப்போது காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த தமிழகத்தின் திருவள்ளூரை சேர்ந்த தசரதநாயுடுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் காரில் இருந்த 5 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
 அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில்  விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த ராமாநாயுடு, நாராயணராவ், பாபுராஜு ஆகியோருக்கு தொடர்புடையது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்றுமுன்தினம் புத்தூர் பகுதியில் ராமாநாயுடு உட்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு இடங்களில் இருந்த 2 கோடி மதிப்புள்ள 60 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!