உப்பு தொழிற்சாலையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது

2018-02-10@ 20:04:29

செய்யூர்: உப்பு உற்பத்தி தொழிற்சாலையை கண்டித்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களை கைது செய்ததால் ஆத்திரம் அடைந்த மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு அருகே 1200 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான உப்பு உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு வில்லியம்பாக்கம், சூணாம்பேடு, வெண்ணாங்குபட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர். ஆண்களுக்கு தினமும் ரூ.290-ம், பெண்களுக்கு ரூ.150-ம் தினக்கூலியாக வழங்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இதுவரை இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட எதுவும் கிடையாது என்று தெரிகிறது.

இந்நிலையில், பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், தொழிற்சாலையின் அடாவடி மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து நேற்று மாலை பெண்கள் உள்பட சுமார் 160க்கு மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் சூணாம்பேடு, செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

 அப்போது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களில் 7 பேரை போலீசார் கைது செய்து சூணாம்பேடு காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுவிக்கக்கோரி நேற்றிரவு 9 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சூணாம்பேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  போலீசாருக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். இதையடுத்து 7 பேரையும் போலீசார்  விடுவித்ததால் மக்கள் அங்கிருந்து சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!