சென்னை: சென்னை காசிமேட்டில் நேற்றிரவு படகில் சீட்டு விளையாடியவர்களை போலீசார் சுற்றிவளைத்ததால் பயந்து கடலில் குதித்த மீனவர் தமிழரசன் உயிரிழந்தார். தமிழரசனின் உடல் காலையில் தான் மீட்கப்பட்டது. மீனவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறிவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காசிமேடு மீன்படி துறைமுகத்தில் தமிழரசன் என்பவர் தமக்கு சொந்தமான விசைப்படகில் நண்பர்களுடன் நேற்றிரவு சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை விரட்டியடித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தலையில் காயங்களுடன் மயங்கிய நிலையில் தமிழரசன் கடலில் குதித்துள்ளார். அவரை தீயணைப்பு படையினர் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று காலை அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தமிழரசின் இறப்பிற்கு போலீசார் தாக்குதல் நடத்தியதே காரணம் எனக்கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடலை வாங்க மறுத்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது விசைப்படகுகளின் பாதுகாப்பிற்காக மீன்பிடி துறைமுகத்தில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது ரவுடிகளை போன்று விரட்டி தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என்று மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறை துணை ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆனால் அவரது பேச்சுவாரத்தையை ஏற்க மறுத்து அரசு அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண வேண்டும், குறிப்பாக தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உறவினர்கள் முன்நிறுத்தினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, தமிழரசனின் மனைவி தீபாவிற்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், குழந்தைகளின் கல்வி செலவை முழுவதுமாக அரசு ஏற்கும் என காவல்துறை துணை ஆணையர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல உறவினர்கள் அனுமதித்தனர்.