இரண்டாவது நாளாக நேற்றும் கனமழை பெய்தது: தமிழகத்தில் இனி வெயில் சுட்டெரிக்கும்: குளிர் அதிகரிக்கவும் வாய்ப்பு: வானிலை அதிகாரி தகவல்

2018-02-09@ 21:44:22

சென்னை: தமிழகம் முழுவதும் பல இடங்களில் நேற்று 2வது நாளாக கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்வதற்கான சூழல் நிலவியது. நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 2 தினங்களுக்கு முன் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றும், கிழடுக்கில் கிழக்கு திசை காற்றும் குறுக்கிட்டன. இதன் காரணமாக பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அதிகபட்சம் விருதுநகர் மாவட்டத்தில் 11 செ.மீ மழை பதிவானது.

திருநெல்வேலி, கரூர், திருவண்ணாமலை, நாமக்கல், விழுப்புரம், தேனி, திருப்பூர், திருவள்ளூர், வேலூர், சேலம், ஈரோடு, மதுரை, கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் என மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, நெல்லை, ராஜபாளையம், தென்காசி, பாபநாசம், அம்பாசமுத்திரம் உள்பட பல இடங்களில் நேற்றும் மழை நீடித்தது. சென்னையில் நேற்று காலை மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘’வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு காற்று திசையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் மழை பெய்தது. இனி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு மிக குறைவு. பஞ்சாப், கர்நாடகா உள்பட வட மாநிலங்களில் 11ம் தேதிக்குப் பிறகு மழை பெய்யும். சென்னை உள்பட பல மாவட்டங்களில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும். மேகக்கூட்டங்கள் தொடர்ந்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் குளிர் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது’’ என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!