குடும்பத்தில் பிரச்னை ... ஆதரவு மாஜி எம்எல்ஏக்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை

2018-02-09@ 02:54:44

சென்னை: குடும்பத்தில் பலரும் அரசியலுக்கு வருவது குறித்து பேசிவருவதால் தன் ஆதரவு மாஜி எம்எல்ஏக்களுடன் தினகரன் நேற்று இரவு திடீர் ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சசிகலா சிறை சென்ற பிறகு, சமீபகால அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் தினகரன் உத்தரவுபடி படியே நடந்து வருகிறது. இந்நிலையில் கட்சியில் இருந்து அவரை நீக்கிய பிறகு அவருக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு போட்டியாக அவரது தம்பி பாஸ்கரன் தன்னுடைய பேரவை மூலம் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று அதிரடியாக கூறினார்.

இது சசிகலா குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதே ேபால், இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவும் தீவிர அரசியலுக்கு அச்சாரமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றொரு பக்கம் ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதி கொடுத்ததே நான்தான் என்று கூறி சசிகலாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் நடராஜன். மன்னார்குடி குடும்பத்தில் இப்படி ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரிவித்து வருவதால், டிடிவி ஆதரவு தகுதி இழப்பு செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், அவர்கள் நேற்று இரவு டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல், கதிர்காமு, ஜெயந்தி பத்மநாபன், ஆரூர் முருகன் உள்ளிட்ட மாஜி எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினகரன் தலைமையில் நடந்துள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் தனது குடும்பத்தில் தலைதூக்கியுள்ள அரசியல் நிலைபாடு குறித்து தினகரன் ஆலோசனை செய்ததாக கூறப்பகிறது.  எம்எல்ஏககள் தகுதி நீக்க வழக்கு இன்னும் சில தினங்களில் தீர்ப்பு வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் நீண்ட நாட்களுக்கு பிறகு, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!