புனே: வரி ஏய்ப்பு மிரட்டல் விடுத்து அமெரிக்கர்கள் 11 ஆயிரம் பேரிடம் பணம் பறித்த சம்பவத்தில், புனே கால் சென்டர் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள கால் சென்டர்களில் இருந்து அமெரிக்க மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த மோசடியில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மிகப் பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க வருவாய்துறை அதிகாரிகள் போல் மிரட்டி ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பே மும்ைபயில் 70 கால் சென்டர் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போதே ரூ.1,900 கோடி அளவுக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது இதே போன்ற மோசடியில் புனேவைச் சேர்ந்த கால் சென்டர் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வருவாய்த்துறை மற்றும் வரத்தகத்துறை, புனே பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் புனே கொரேகான் பூங்கா அருகே உள்ள கால் சென்டரில் புனே போலீசார் கடந்த திங்கள் இரவு அதிரடி சோதனை நடத்தினர். இந்த கால் சென்டரை நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். அமெரிக்கர்கள் 11 ஆயிரம் பேரிடம் ஏமாற்றி பணம் பறிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.