டெல்லி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2017 டிசம்பர் 31-ம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவனை எங்கு அமையும் என்பதை அறிவிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவை பின்பற்றாததால் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலயில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து மத்திய சுகாதரத்துறைக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை கடிதம் அனுப்பியதக வழக்கு விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ல் தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி விட்டன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய ஆய்வு நடத்தியும் எந்த முடியும் எடுக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பிரதமர் அலுவலகம் பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது.