புதுடெல்லி: வேலையை விட்டு நிறுவனம் அனுப்பும்போது வழங்கும் இழப்பீட்டுக்கும் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அரசு கடந்த 1ம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரை பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தொழிலாளி ஒருவர் பணியில் இருக்கும்போது தான் ஈட்டும் வருவாய் உச்ச வரம்புக்கு மேல் இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்துகிறார். இது பொதுவாக சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் அவருக்கு கிடைக்கும் போனஸ் உள்ளிட்ட வருவாய்க்கும் பொருந்தும். அதேநேரத்தில், நிறுவனம் நஷ்டம், ஆட்குறைப்பு போன்ற காரணங்களுக்காக பணியில் இருந்து தொழிலாளியை வீட்டுக்கு அனுப்பினால், அவருக்கு மூன்று மாதம் சம்பளத்தை இழப்பீடாக வழங்கும். இந்த இழப்பீட்டுத்தொகை நிறுவனத்துக்கு ஏற்ப மாறுபடும்.
இதற்கு வருமான வரி கிடையாது. ஆனால் இந்த தொகைக்கும் வருமான வரி வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பட்ஜெட்டிலும் பரிந்துரை செய்துள்ளது. வருமான வரிச்சட்டம் 1961 விதிகளின்படி, பல்வேறு வகைகளில் கிடைக்கும் இழப்பீடுகள் வரிக்கு உட்பட்ட வருவாயாகவே கருதப்படுகின்றன. இதில், வேலையை விட்டு நிறுவனம் அனுப்பும்போது வழங்கும் இழப்பீட்டு தொகைக்கு விலக்கு உண்டு.
இதில், வருமான வரிச்சட்டம் பிரிவு 28ல் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, தொழிலாளியை வேலையை விட்டு அனுப்பும்போது வழங்கப்படும் இழப்பீடு உட்பட வருமான வரிக்கு உட்பட்ட வருவாயாக கருதப்படும். இதுதவிர, பிரிவு 56ன் கீழ் இது சேர்க்கப்பட உள்ளது. மத்திய அரசு வரி வருவாயை பெருக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டால் இழப்பீடு தொகைக்கும் தொழிலாளி வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இதுகுறித்து வருமான வரித்துறை நிபுணர்கள் கூறுகையில், ‘‘இழப்பீடு என்பது ஒரு போதும் வருவாயாக கருதப்படுவதில்லை. மாறாக, வேலை இழக்கும் தொழிலாளிக்கு அளிக்கப்படும் உதவித்தொகை இது. மறு வேலை தேடும் வரை அவருக்கு இந்த தொகைதான் கைகொடுக்கிறது. ஒருபுறம் வேலை வாய்ப்பை அதிகரிப்பதாக கூறும் அரசு, அதற்கு எதிராக இதுபோன்ற வரி விதிப்புகளை கொண்டுவரக்கூடாது. இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மறு பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றனர்.