பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த போத்தமடை வனத்தில் உள்ள குட்டையில், விலங்குகள் இடம்பெயர்ந்து வருவதை தடுக்க, வனத்துறை மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழையில்லாததால், ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட போத்தமடை, தம்பம்பதி, ஆயிரங்கால் குன்று, சேத்துமடை உள்ளிட்ட வனத்திலிருந்து, கடந்த சில மாதமாக யானை, கடமான், காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி இடம்பெயர்ந்தது.
தற்போது, பொள்ளாச்சி வனப்பகுதியில் உள்ள சிற்றாறு மற்றும் நீரோடைகளில் தண்ணீரின்றி உள்ளதால், அடர்ந்த காட்டில் உலா வரும் வனவிலங்குள், உணவு மற்றும் தண்ணீரை தேடியும் இடம்பெயர்வது அதிகரித்துள்ளது இதையடுத்து, நீர்நிலைகளை தேடி விலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க, வனத்துறை மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள குட்டை மற்றும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், பொள்ளாச்சி வனச்சரகத்தின் ஒருப்பகுதியான போத்தமடையில் விலங்குகள் குடிப்பதற்காக, அங்குள்ள குட்டைபோன்ற தொட்டி பராமரிக்கப்பட்டு, அதில் லாரி மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது.
கோடை துவங்குவதற்கு முன்பாக, வனப்பகுதியில் வறட்சி ஏற்படுவதால், இன்னும் பல இடங்களில் இருக்கும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி, விலங்குகளின் தாகம் தீர்க்கவும், அவை இடம்பெயர்ந்து, ஊருக்குள் புகுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.