‘ஓகி’யால் பாதிக்கப்பட்ட அணைக்கரையில் பனைமர பாலத்தை பயன்படுத்தும் மாணவ, மாணவிகள்

2018-02-09@ 21:02:35

ஏர்வாடி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட அணைக்கரையில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு 2 மாதங்களாகியும் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆற்றின் குறுக்கே பனைமரத்தை போட்டு தற்காலிகமாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. நெல்லை மாவட்டம், ஏர்வாடி அடுத்த அணைக்கரை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு பணி நிமித்தமாக அருகிலுள்ள சிறுமளஞ்சி கிராமத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த கிராமத்துக்கான பஞ்சாயத்து அலுவலகமும் அங்குதான் உள்ளது. அணைக்கரை, சிறுமளஞ்சி ஆகிய இரு கிராமங்களுக்கும் இடையே நம்பியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தரை வழிப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம், கடந்த ஓகி புயலின்போது ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் பாதிப்புக்குள்ளான மக்கள், பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி டிச.4ம் தேதி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த நாங்குநேரி தாசில்தார் ஆதிநாராயணன் தலைமையிலான அதிகாரிகள், அணைக்கரைக்கு பேருந்து வசதி செய்து தரப்படும். ரேஷன் பொருட்கள், முதியோர் உதவித்தொகை ஊருக்குள் கொண்டு வந்து வழங்கப்படும். வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் சீரமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். அதன்படி சுமார் 10 நாட்கள் மட்டுமே ஊருக்குள் வந்து பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற அரசு பஸ், அதன்பிறகு வரவில்லை. முதியோர் உதவித்தொகையும் நேரில் வழங்கப்படவில்லை. ரேஷன் கடையும் திறக்கப்படவில்லை. மேலும் ஆற்றில் புதிய தரைவழி பாலமும் கட்டப்படவில்லை.

இதையடுத்து அணைக்கரையை சேர்ந்த பொதுமக்கள் நம்பியாற்றை கடக்க அதன் குறுக்கே பனை, தென்னை மரத்தைப் போட்டு தற்காலிக பாலமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆபத்தை உணராமல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளும் தினமும் ஆற்றை கடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தை மத்திய குழுவினரும், மனித உரிமை ஆணைய சிறப்பு தூதர் சைலஜாவும் பார்வையிட்டு சென்ற போதும் இதுவரை அணைக்கரைக்கு விடிவு காலம் பிறக்கவில்லை.

குறிப்பாக போராட்டத்தின்போது சமாதானம் பேசும் அதிகாரிகள், தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாகி இருக்கிறது. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அணைக்கரை கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பாலம் சீரமைப்பு பணிகளையும் உடனடியாக நிறைவேற்ற முன்வருவார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!