ஆதார் இல்லை என்பதற்காக சலுகைகள் மறுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

2018-02-09@ 20:09:40

புதுடெல்லி: அரசு நல திட்டங்களில் மானியம் உள்ளிட்ட சலுகைகளை பெற, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன் நடக்கிறது. நேற்று நடந்த விசாரணையின் போது, மனுதாரர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கபில் சிபல் வாதிட்டதாவது: ஆதார் இல்லையென்றால், சமூக பாதுகாப்பு திட்டங்களின் சலுகைகளை, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், ஏழை மக்களால் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடிப்படை தேவைகளான, ஊட்டச்சத்து, பள்ளிகளில் மதிய உணவு, விதவைஓய்வூதியம் உட்பட, பல சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள், ஆதார் இல்லையென்ற காரணத்துக்காக மறுக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஆதார் இல்லையென்பதற்காக, யாருக்கும் சமூகநலத் திட்டங்களின் பலன்களை மறுக்கக் கூடாது. இது தொடர்பாக, நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார். மத்திய அரசு சார்பில் ஆஜரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா கூறியதாவது:நாட்டில், 96 சதவீத மக்களுக்கு, ஆதார் வழங்கப்பட்டு விட்டது. இன்னும், 4 சதவீதம் பேர் மட்டுமே, ஆதார் பெறவில்லை.

ஆதார் இல்லையென்பதற்காக, யாருக்கும், எந்த சலுகையும் மறுக்கப்பட மாட்டாது; மறுக்கப்படவும் இல்லை. ஆதார் இணைப்புக்கான காலக்கெடு, மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில், நீதிமன்றம், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க வேண்டியஅவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: ஆதார் இல்லை என்பதற்காக, யாருக்கும், எந்த சலுகையையும் மறுக்கக் கூடாது. சமூகநலத் திட்டங்களின் சலுகைகளை பெற, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆதார் இல்லையெனில், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உட்பட, வேறு அடையாள அட்டைகள் மூலம், அவர்களுக்கு சமூகநலத் திட்டங்களின் சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!