ஓபிஎஸ் முடிவால் விரக்தி பாஜகவா, டிடிவி தினகரன் அணியா? : குழப்பத்தில் மைத்ரேயன்

2018-02-09@ 00:24:55

சென்னை: ஓபிஎஸ் கைவிட்டதால், அதிருப்தியில் உள்ள அதிமுக எம்பி மைத்ரேயன், பாஜகவுக்கு செல்வதா, டிடிவி தினகரன் அணிக்குச் செல்வதா என்ற குழப்பத்தில் தவித்து வருகிறார்.ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு முதல்வர் பதவியை ஏற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அவரை ராஜினாமா செய்யச் சொன்னதால், அதிமுகவை உடைத்தார். அப்போது அவருக்கு பக்க பலமாக இருந்தவர் எம்பி மைத்ரேயன். பன்னீர்செல்வத்தை, பிரதமர் மோடியுடன் அறிமுகப்படுத்தி, அதிமுக உடைவதற்கு காரணமாக இருந்தார். இதனால் பன்னீர்செல்வம் மைத்ரேயனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமித்தார். இந்த மாவட்டங்களில் முழு நிர்வாகத்தையும் அவர்தான் கவனித்தார். இவர், ஜெயலலிதா இருந்தபோதும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர்.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி அணியும், பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன. அதன்பின்னர் பன்னீர்செல்வமும், மா.பா.பாண்டியராஜனும் அமைச்சராக பதவி ஏற்றனர். கட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பன்னீர்செல்வம் அணியில் இருந்த மூத்த தலைவர்கள் தினமும் தலைமைச் செயலகத்தில் பன்னீர்செல்வம் அறையில் அமர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். இந்தநிலையில்தான், பன்னீர்செல்வம் அணியில் இருந்த பல மூத்த நிர்வாகிகள் முழுமையாக எடப்பாடிக்கு ஆதரவாக மாறிவிட்டனர். கடைசியில் பன்னீர்செல்வமும், எடப்பாடியின் ஆதரவாளராக மாறிவிட்டார்.

ஆனால், பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடைக்கவில்லை இதேபோல பன்னீர்செல்வமும், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று பிரதமர் மோடியிடம் புகார் செய்ய முடிவு செய்தார். ஆனால் மோடியோ, பன்னீர்செல்வத்தை சந்திக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செல்லும்படி மோடி கூறிவிட்டார். இதனால் பன்னீர்செல்வம் அதிர்ச்சி அடைந்தார். அப்போது மைத்ரேயன்தான், ஆர்.எஸ்.எஸ்.மூத்த தலைவர் மோகன் பகவத்திடம் பேசினார். அவர், மோடியிடம் பேசிய பின்னர்தான் பன்னீர்செல்வத்துக்கும், மைத்ரேயனுக்கும் அனுமதி கிடைத்தது. அப்போது கூட மோடி, பன்னீர்செல்வத்துக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். ஆனால் மைத்ரேயனிடம் நன்றாக பேசினார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தனக்கு முக்கியத்துவம் கட்சியில் அளிக்கப்படவில்லை என்று மைத்ரேயன் கருதுகிறார். இதனால் கடந்த இரு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பாஜகவில் சேரலாமா? அல்லது டிடிவி தினகரன் அணியில் இணையலாமா? என்று ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் இரு தரப்பில் எந்த அணியில் சேர்ந்தாலும் நமக்கு முக்கியத்தும் கிடைத்தால் சேரலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனக்கு மட்டும் பார்த்துக் கொண்டார். நம்பி வந்தவர்களை கைவிட்டு விட்டார் என்றும் ஆதரவாளர்கள் புலம்பினர். இதனால் என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!