சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.248 குறைந்தது. ஒரு சவரன் ரூ.22,864க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலை காணப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த 25ம் தேதி ஓராண்டில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சவரன் ரூ.23,376க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரன் ரூ.216 வரை உயர்ந்தது.
அதன்பின்னர், தங்கம் விலையில் ஏற்றம், இறக்க நிலை காணப்பட்டு வந்தது. கடந்த 6ம் தேதி ஒரு சவரன் ரூ.23,288க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,889க்கும், ஒரு சவரன் ரூ.23,112க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.31 குறைந்து ஒரு கிராம் ரூ.2,858க்கும், சவரனுக்கு ரூ.248ம் குறைந்து ஒரு சவரன் ரூ.22,864க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 வரை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கான குறியீடு சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், இங்கிலாந்தில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு நிலவி வருகிறது. இதுபோன்ற தாக்கங்களால் தங்கம் விலை சரிந்துள்ளது” என்றார்.