புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது சோபியான் மாவட்டம். இங்குள்ள கனவ்போரா கிராமத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ராணுவ மேஜர் ஆதித்யா குமார் உட்பட, ரோந்து சென்ற ராணுவ வீரர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளை காஷ்மீர் போலீசார் பதிவு செய்தனர்.இதை எதிர்த்து மேஜர் ஆதித்யா குமாரின் தந்தையான லெப்டினென்ட் கர்னல் கரம்வீர் சிங், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகன் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட வன்முறை கும்பலிடம் இருந்து சக ராணுவ வீரர்களை காப்பாற்றவும், அரசு உடைமைகளை காப்பாற்றவும் மகன் கடமையை ஆற்றி இருக்கிறார்.
வன்முறை கும்பலின் தாக்குதலால் கடந்தாண்டு டிஎஸ்பி முகமது அயூப் பண்டித் கொல்லப்பட்டார். இம்மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக உச்ச நீதிமன்றமும் கருதுவதால்தான், இந்த மனுவை நேரடியாக இங்கு தாக்கல் செய்கிறேன். நானும் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறேன். மத்திய அரசின் உத்தரவுப்படி எனது மகன் தனக்கு வழங்கப்பட்ட கடமையை ஆற்றி வருகிறார். அவர் மீதும், இதர ராணுவ வீரர்கள் மீதும் காஷ்மீர் போலீசார் தவறான முறையிலும், தன்னிச்சையாகவும் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும், ராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும், குற்ற நடவடிக்கைகளின் மூலம் எனது மகன் உள்ளிட்ட ராணுவத்தினரை துன்பறுத்தியதற்காக அவர்களுக்கு தகுந்த நஷ்டஈடு வழங்கும்படியும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.