தேனி: தேனியில் கள்ளநோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்திய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் கதிரேசன் என்பவரது வங்கி கணக்கில் ரூ.48,500 செலுத்தப்பட்டது. ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளாக செலுத்தப்பட்ட இந்த நோட்டுகள்
கள்ள ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளது. இது குறித்து வங்கியின் மேலாளர் ஜோசப் இம்மானுவேல் தம்பாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று அவர் சோதனை செய்ததில், ரூ.42,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் செலுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர்.
இதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பெரிய பள்ளிவாசலை சேர்ந்த மற்றும் போடியை சேர்ந்த பீர் முகமது மகன் அப்பாஸ் என்பவர்கள் தான் வங்கியில் பணம் செலுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து கதிரேசன், ஜஹாங்கீர், அப்பாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தேனி மிராண்டா லைன் பகுதிக்கு சென்ற சோதனை நடத்தியதில் ரூ.500, ரூ.2000 என ரூ.18 லட்சம் மதிப்பில் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய எந்திரத்தை பறிமுதல் செய்தனர். சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு கள்ள நோட்டு கும்பல் தேனியில் பிடிபட்டுள்ளது. எனவே இந்த 2 கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.