திருவாரூர் : நன்னிலம் தாலுகாவில் உள்ள எரவாஞ்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலைப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் உள்ள கூந்தலூர், கடமங்குடி, புதுக்குடி உட்பட பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்குள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். மேலும், நன்னிலத்திற்கு அடுத்தபடியாக வர்த்தக நிறுவனங்களும் எரவாஞ்சேரியில் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் வழியாக மயிலாடுதுறை செல்வதற்கு இது மையப்பகுதியாக இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாக உள்ளது.
இந்நிலையில் எரவாஞ்சேரியிலிருந்து நாச்சியார் கோயில் வரையிலான சுமார் 15 கி.மீட்டர் மாநில நெடுஞ்சாலை சேதம் அடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளி்க்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறுகின்றன. சாலையில் பயணிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நாச்சியார் கோயிலில் உள்ள பிரசித்தி பெற்ற சீனிவாச பெருமாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் இந்த சாலையினால் வேதனைப்படுகின்றனர்.
இந்த சாலையினை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை மனு அளித்தும் நெடுஞ்சாலை துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தற்போது மேலும் மோசமான நிலையில் உள்ள சாலையினை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் நலன் கருதி உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.