2016 ஏப்ரலுக்கு முன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு வட்டி குறைய வாய்ப்பு உண்டா?

2018-02-09@ 01:51:25

மும்பை: 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு வட்டி குறைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி ஒவ்வொரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கை வெளியிடும்போதும், வட்டி குறையுமா என்பது பொதுவான எதிர்பார்ப்பு. இதன்படி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்ட ரிசர்வ் வங்கி, குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கவில்லை. பண வீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்தது. இது வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஒவ்வொரு வங்கியும் கடன் வட்டியை நிர்ணயித்துள்ளன. பழைய முறைப்படி பொதுவாக அடிப்படை வட்டி விகிதத்துக்கு ஏற்ப கடன் வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. வங்கிகளுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதம் மாறுபடும். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வட்டியில் மாற்றம் இருக்காது. வட்டி குறைப்பு பலன் உடனே இவர்களுக்கு கிடைப்பதில்லை.     இந்நிலையில், வட்டி விகித கொள்கையை அறிவித்த ரிசர்வ் வங்கி, அனைத்து வீட்டுக்கடன்களுக்கும் 2018 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து எம்சிஎல்ஆர் முறைப்படி வட்டி நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எம்சிஎல்ஆர் என்பது வங்கிகள் டெபாசிட் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம். 2016ம் ஆண்டு ஏப்ரலில்தான் இது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வட்டி குறைப்பு பலன் கிடைக்கும். ஆனால், இதற்கு முன்பு வீட்டுக்கடன் வாங்கியவர்கள், வங்கிகள் நிர்ணயித்த நிலையான அடிப்படை வட்டியைத்தான் செலுத்தி வந்தனர். இந்த அடிப்படை வட்டியை 2018 ஏப்ரல் 1ம் தேதி முதல் எம்சிஎல்ஆர் உடன் இணைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
 எனவே, வங்கிகள் 2016 ஏப்ரலுக்கு பிறகு மட்டுமின்றி, அதற்கு முன்பு வாங்கிய கடன்களுக்கும் எம்சிஎல்ஆர் விகிதப்படி வட்டியை நிர்ணயிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கணக்கிடப்பட்டால், பழைய முறைப்படி கடன் வாங்கியவர்களுக்கு வட்டி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மற்றும் பொருளாதார ஆலோசகர்கள் கூறியதாவது: வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தை மூன்று மாதம் வரை, ஆறு மாதம், ஓராண்டு முதல் மூன்று ஆண்டு வரை என கணக்கிட்டு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. இதனால் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உடனடி பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 2016 ஏப்ரலில் எம்சிஎல்ஆர் விகிதம் 9.6 சதவீதமாக இருந்தது தற்போது 8.25 சதவீதமாக குறைந்துள்ளது. சில வங்கிகள் 13.26 சதவீதமாக வைத்திருந்தன. இதுவும் 8.25 சதவீதம் ஆகிவிட்டது. வங்கிகளுக்கு ஏற்ப இந்த விகிதம் மாறுபடும். 2016 ஏப்ரலுக்கு முன்பு உள்ளவர்களுக்கு புதிய முறைப்படி கணக்கிட்டால் வட்டி குறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உடனடியாக இது வழங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. வங்கிகள்தான் இதை முடிவு செய்ய வேண்டும். இதற்கு சில காலம் ஆகலாம் என்று தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!