திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் பல ஆண்டுகள் ஜவ்வ்....வாக இழுக்கும் மேம்பாலப் பணி

2018-02-09@ 16:00:45

திண்டுக்கல் : ரயில்வே மேம்பாலத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில் பல ஆண்டுகளாக இழுபறி இருந்து வருகிறது. பொதுமக்களின் சிரமம் கருதி விரைவில் முடிவுக்கு கொண்டு வர கவர்னர் பார்வைக்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட உள்ளது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் 3 ரயில்வே கேட்கள் அருகருகே அமைந்துள்ளன. தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்வதால் கேட்கள் அடிக்கடி மூடப்பட்டு போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் அவசரத்திற்கு இப்பகுதியை கடந்து செல்ல முடியாததால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் துயரத்தில் உள்ளனர்.
தொடர் அழுத்தம் காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.72 கோடி மதிப்பீட்டில் மூன்று கேட்டுகளையும் ஒருங்கிணைத்து மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இதனால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டும் ஜிடிஎன்.சாலை, திருநகர், மாசிலாமணிபுரம், ராமர் காலனி வழியே 3 கிமீ. சுற்றிச்செல்கிறது.
வழக்கம்போல ரயில்வேகேட் மூடல் பாதிப்புடன் சுற்றுப்பாதையும் வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தையே ஏற்படுத்தியது. பேருந்து போக்குவரத்து முடங்கியதால் வெளியூரில் இருந்து உறவினர்கள் கூட இப்பகுதிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.

நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நெடுஞ்சாலை துறையினராலும் முழுவீச்சில் செயல்பட முடியவில்லை. நில உரிமையாளர்கள் கேட்ட கட்டணத்தை அரசால் வழங்க முடியாததால் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மொத்தம் 74 பேரில் 24 பேர் மட்டுமே இதற்கு சம்மதித்துள்ளனர். 60 சதவீதம் பேர் ஒப்புதல் இருந்தால்தான் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நில உரிமையாளர்கள் தங்கள் நிலைப்பாட்டிலே இருந்ததால் கட்டுமானப்பணி முடங்கியது.

3 கேட்டுகளிலும் அமைக்கப்பட்டுள்ள சப்வேயும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதையும் மூடியே வைத்துள்ளனர். இது செயல்பாட்டிற்கு வந்தாலாவது எளிதில் வாகனங்கள் எதிர்பகுதிக்கு கடந்து சென்றுவிடும். ஆனால் அதற்கான வழியும் கிடைக்காததால் முன்பைவிட கூடுதல் சிரமமே பொதுமக்களுக்கு ஏற்பட்டது. இதுபோன்று பல ஆண்டுகளாக சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வந்த இப்பகுதி பொதுமக்களுக்கு மந்தமான பணி மேலும் கோபத்தை தூண்டியது. இதனால் மூடப்பட்டிருந்த பழநி ரயில்வேகேட்டில் டூவீலரை மோதவிட்டு உடைத்து தகர்ந்து விட்டு தண்டவாளம் வழியே டூவீலர்களில் எதிர்பகுதிக்கு பயணிக்கத் துவங்கினர்.

கரூர் கேட் பகுதியிலும் இதுபோன்று ஏராளமான டூவீலர்கள் அபாயகரமான முறையில் தண்டவாளங்களை கடந்து சென்று வருகின்றன. இதுஒருபுறம் இருக்க.. போடப்பட்ட திட்டமதிப்பீடும் அதிகரித்துவிட்டது. இதற்காக ஒதுக்கப்பட்ட அதிகாரிகளின் சம்பளம், அலுவலக பராமரிப்பு, பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்ட தொகை என்று பல்வேறு செலவினங்களும் கட்டுமீறிச் சென்றுகொண்டே இருக்கிறது.முடிவிற்கு வராமல் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்லும் பணியினால் பொதுமக்களும் பொறுமை இழந்து கதறத் துவங்கினர்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் தாங்கள் படும் சிரமம் குறித்து கோரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தனர். கடும் நெருக்கடி இருந்த போதிலும் நிலஉரிமையாளர்களின் உணர்வுகளை முன்னுறுத்தி இதுவரை அவர்களுக்கான பல்வேறு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் தொடர்ந்து பல ஆண்டாக உடன்பாடு ஏற்படவில்லை. ஒருகட்டத்தில் பல பகுதியிலும் இருந்து இவர்களுக்கும் அழுத்தம் ஏற்படத் துவங்கியது. இதனால் அதிகாரிகள் இப்பிரச்னையை நில எடுப்பு ஆணையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து கவர்னர் ஆணைக்காக அனுப்பப்பட உள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இதற்கு மாற்றாக எந்த வழிமுறைகளையும் மேற்கொள்ள முடியாது. வரும் உத்தரவுகளை அப்படியே பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக நெடுஞ்சாலைதுறையினர் தயார்நிலையில் உள்ளனர். மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மின்கம்பங்கள் இடமாற்றப்பட்டுள்ளன. உத்தரவு வந்ததும் பணிகள் துரிதப்படுத்தப்படும். பல ஆண்டுகளாக துயரத்தில் ஆழ்ந்து கிடக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விரைவில் இதன் மூலம் பலன் கிடைக்கும் எனத் தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!