சென்னை: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் 2017-18 நிதியாண்டின் 3ம் காலாண்டு முடிவு மற்றும் 9 மாத முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி என்.காமகோடி சென்னையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டின் 3ம் காலாண்டில் கடந்த ஆண்டை விட 19 சதவீதம் உயர்ந்து ரூ.365.14 கோடியாகவும், மொத்த லாபம் 8 சதவீதம் அதிகரித்து ரூ.296.46 கோடியாகவும், நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து ரூ.154.80 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கியின் மொத்த வியாபாரம் கடந்த ஆண்டை விட 11% உயர்ந்து ரூ.57,428 கோடியாக உள்ளது. வைப்புத்தொகை 5% உயர்ந்து ரூ.31,339 கோடியாகவும், கடன் வழங்குதல் 20% உயர்ந்து ரூ.26,089 கோடியாகவும் உள்ளது. டிசம்பருடன் முடிந்த 9 மாதங்களில் நிகர வட்டி வருவாய் 20% உயர்ந்து ரூ.1,062.36 கோடியாகவும், மொத்த லாபம் 22% உயர்ந்து ரூ.913.47 கோடியாகவும், நிகர லாபம் 18% உயர்ந்து ரூ.439.87 கோடியாகவும் அதிகரித்துள்ளது. நிகர வராக்கடன் 1.74%, வங்கி சொத்து மீதான வருவாய் 1.64%. நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த ரூ.3,427 கோடியில் இருந்து ரூ.3,990 கோடியாக உயர்ந்துள்ளது. 2017 டிசம்பர் 31 வரை 561 கிளைகள், 1,584 ஏடிஎம் இயந்திரங்களுடன் செயல்பட்டு வருகிறது என்றார். பேட்டியின்போது வங்கியின் பொது மேலாளர் வி.ரமேஷ் உடன் இருந்தார்.