சென்னை : அரசியலில் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பது தேவையா என்பதை இருவரும் யோசிக்க வேண்டும் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ள நடிகர் கமலஹாசன் , இருவரும் இணைவது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
தாமும் நடிகர் ரஜினியும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் இருவரும் கொள்கை விளக்கங்கள் சொல்ல வேண்டும் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.இது பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும் என்பதால் இணைப்பு என்பது இப்போது எடுக்க கூடிய முடிவே கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.கூட்டணி வைப்பது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும் என்று கமல் தெரிவித்துள்ளார்.
நியாயமாக தங்களுக்கு வந்து சேர வேண்டியவை சேர வில்லை என்று ஆராய்ச்சி மணி அடித்ததற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் தண்டனை பெற்று வருகிறார்கள் என்று கூறியுள்ளார். தண்டனை தந்ததில் ஒரு முதலாளித்தனம் தான் தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கான கூலியை நிறுத்தியது மிகவும் அதிகப்படியான தண்டனை என்றும் அவர் தெரிவித்தார்.ஏற்கனேவே பென்சன் கொடுக்காமல் வைத்திருந்ததால் பலரின் வாழ்க்கை கெட்டுப்போய் விட்டது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.