ரிசர்வ் வங்கி அறிவிப்பால் ஏமாற்றம் : வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு இல்லை

2018-02-08@ 01:24:42

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை. இதனால் வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பில்லை. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதன்படி நடப்பு நிதியாண்டுக்கான 6வது சீராய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதில், ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடன் வட்டி (ரெப்போ) 6 சதவீதமாகவே நீடிக்கும் என தெரிவித்துள்ளது. வங்கிகளிடம் உள்ள நிதி இருப்புக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரிவர்ஸ் ரெப்போவும் 5.75 சதவீதமாக நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஜனவரி மாதத்தில் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து விலை வாசியும் உயர்ந்து வருகிறது.

நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் சில்லரை விலை பண வீக்கம் 5.1 சதவீதமாகவும், 2018-19 நிதியாண்டில் இது 5.1 முதல் 5.6 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 2018-19 நிதியாண்டின் 2ம் அரையாண்டில் பண வீக்கம் 4.5 சதவீதம் முதல் 4.6 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த மதிப்புக்கூட்டு வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.6 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என கவர்னர் உர்ஜித் படேல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்கு ஆதாய வரியை மத்திய அரசு விதித்துள்ள நிலையில், சீராய்வு அறிக்கை வெளியிட்டு பேசிய கவர்னர் உர்ஜித் படேல், நிறுவன வரி, டிவிடென்ட் வரி, மூலதன ஆதாய வரி என 5 வகை வரி விதிக்கப்படுகிறது. இது முதலீடு, சேமிப்பில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்றார். இதில், வீடு வாகன கடன் வட்டி குறைக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் மேற்கண்ட கடன்களுக்கான வட்டிகள் குறைய வாய்ப்பில்லை. அதேநேரத்தில், பொருளாதார நிலை முன்னேற்றம் அடையாவிட்டால் கடன் வட்டி உயரலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, எம்சிஎல்ஆர் முறையில் வங்கிகள் கடன் வட்டியை முடிவு செய்கின்றன. ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காததால் எம்சிஎல்ஆர் விகிதத்தை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வங்கிகளுக்கு இல்லை. எம்சிஎல்ஆர் விகிதத்துக்கு மாறுவோருக்கு வட்டிகள் ரிசர்வ் வங்கி விகிதத்துக்கு ஏற்ப குறைவதில் தாமதம் இருக்காது. ஆனால், அடிப்படை வட்டி விகிதத்தில் இருப்பவர்கள் இன்னும் காக்திருக்கவேண்டி வரும் என வங்கி வட்டாரங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், டெபாசிட் வட்டி விகிதங்கள் உயரவும் வாய்ப்புகள் உள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!