புதுடெல்லி: தங்கத்தின் தேவை 17 ஆண்டுகளுக்கு பிறகு அபாரமாக உயர்ந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலக அளவில் தங்கம் நுகர்வில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆனால், பண மதிப்பு நீக்கம், கட்டாய கேஒய்சி விதிமுறைகள், சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டம் போன்றவற்றால் நகை விற்பனை மிகவும் மந்த கதியில் இருந்தது. கடந்த 2017ம் ஆண்டில் தங்கத்தின் தேவை 9.1 சதவீதம் உயர்ந்து 727 டன்களாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டில் இது 666 டன்களாக இருந்தது. ஒட்டு மொத்த அளவில் 5 ஆண்டில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அதேநேரத்தில் காலாண்டு அடிப்படையில் கணக்கிடும்போது 4ம் காலாண்டில் 17 ஆண்டில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு முந்தைய காலாண்டுகளில், பண திப்பு நீக்கம், ஜிஎஸ்டி, சட்ட விதிகள் போன்றவற்றால் விற்பனை சரிந்திருந்தது. 2017ம் ஆண்டில் மதிப்பு அடிப்படையில் தங்கத்தின் தேவை ரூ.1,39,290 கோடியாக இருந்தது. ரூ.1,48,100 கோடியாக அதிகரித்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு பல காரணங்கள் உள்ளன. தங்கம் விலை குறைவு, தந்தேராஸ், ஊரக பகுதிகளில் நகை வாங்குதல் அதிகரிப்பு, பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கியது ஆகியவை இவற்றில் முக்கியமானவை. இதுதவிர, கடந்த ஆண்டின் பிற்பாதியில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் விதி விலக்குகள் கொண்டுவரப்பட்டன. இதனால் நகை விற்பனை உயர்ந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் தங்கத்துக்கு சாதகமான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டில் தங்கத்தின் தேவை 700 டன் முதல் 800 டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
88.4 டன் தங்கம் மறு சுழற்சி:
இந்தியாவின் நகை தேவைக்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம்இறக்குமதி செய்யப்படுகிறது. இதுதவிர, உள்நாட்டிலேயே பழைய நகைகளைவாங்கி உருக்கியும் செய்யப்படுகிறது. இந்த வகையில் 2016ம் ஆண்டில் 79.5 டன் தங்கம் மறு சுழ்சி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 88.4 டன்களாக உயர்ந்துள்ளது என தங்க கவுன்சில் கூறியுள்ளது.