ஸ்மிரிதி மந்தனா அபார சதம்: தொடரை வென்றது இந்தியா

2018-02-08@ 00:26:40

கிம்பர்லி: தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 178 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. கிம்பர்லி டயமண்ட் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக பூனம் ராவுத், ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தது. ராவுத் 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் மித்தாலி ராஜ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மறு முனையில் மந்தனா அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்.

மித்தாலி 20 ரன் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து மந்தனா - ஹர்மான்பிரீத் கவுர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சிதறடித்து 134 ரன் சேர்த்தது. மந்தனா சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் அவர் விளாசிய 3வது சதம் இது. மந்தனா 135 ரன் (129 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்தது. ஹர்மான்பிரீத் 55 ரன் (69 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), வேதா கிருஷ்ணமூர்த்தி 51 ரன்னுடன் (33 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 50 ஓவரில் 303 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் துரத்தலை தொடங்கிய தென் ஆப்ரிக்க மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 30.5 ஓவரில் 124 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

தொடக்க வீராங்கனை லிஸெல் லீ 73 ரன் (75 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். மரிஸன்னே காப் 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பூனம் யாதவ் 4, தீப்தி, ராஜேஷ்வரி தலா 2, ஜுலன் கோஸ்வாமி 1 விக்கெட் வீழ்த்தினர். மந்தனா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பாட்செப்ஸ்ட்ரூம் சென்வெஸ் பார்க் மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

ஜுலன் கோஸ்வாமி 200: மகளிர் கிரிக்கெட் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமை, இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமிக்கு (35 வயது) கிடைத்துள்ளது. தென் ஆப்ரிக்கா அணியுடன் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் வுல்வார்ட் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டினார். இது அவரது 165வது ஒருநாள் போட்டியாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!