துபாய்: தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆர்.கே. (வயது 27, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டுமான இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். தமிழகத்தில் இருந்தபோது, இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். காதலியின் குடும்பத்தினருக்கு இவர்களின் விஷயம் அரசல் புரசலாக தெரிந்து, வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து ஆர்.கே.க்கு தகவல் தெரிவித்துள்ளார் காதலி. இதனால், தான் வேலை பார்த்த நிறுவனத்திடம் தாய் நாடு செல்வதற்காக விடுமுறையும், தன்னுடைய பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரியும் கேட்டுள்ளார்.
ஆனால், ஒப்பந்தக் காலத்தில் விதிமுறைகளின்படிதான் அனுமதி அளிக்க முடியும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. இதனால் எப்பாடுபட்டாவது தமிழகத்துக்கு சென்றுவிடுவது என்று தீர்மானித்து, சம்பவ தினத்தன்று, உடமைகள் எதையும் எடுத்துக் கொள்ளாமல், பர்ஸ்சை மட்டும் எடுத்துக் கொண்டு துபாய் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு யாரும் பார்க்காத சமயத்தில் வேலியை தாண்டிக் குதித்து விமானங்கள் நிற்கும் இடத்தை நோக்கி ஓடியுள்ளார். ஏதாவது ஒரு விமானத்தில் ஏறி, தமிழகத்துக்கு சென்றுவிடுவது மட்டும்தான் அவரது இலக்காக இருந்துள்ளது.
அவரது போதாத காலம், பெட்டிகளை ஏற்றி, இறக்கும் ஊழியர் ஒருவர் ஆர்.கே.யை பார்த்துவிட்டார். இதுகுறித்து அவர் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் ஆர்.கே.யை கைது செய்தனர். அப்போது பர்ஸ்சில் இருந்த தன்னுடைய காதலி படத்தை காட்டி, அவளுக்கு திருமணம் ஆகப்போவதையும், இதனால் தான் தமிழகத்துக்கு சென்றே ஆக வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அவர் கூறியது அனைத்தும் உண்மை என்று தெரியவந்ததை தொடர்ந்து, அவரை சொந்த ஜாமீனில் வெளியே செல்ல அனுமதித்தனர். ஆனால், இனி இதுபோன்று நடக்கக்கூடாது என்றும் எச்சரித்தனர்.